வேலூர், டிச.19: வேலூர் அருகே கார் வாங்க பணம் தராத தகராறில் தந்தையை கீழே பிடித்து தள்ளி விட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் அடுத்த அன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (60). இவர் தனியார் பர்னிச்சர் கடையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவரது மகன் இளையராஜா (36), டிரைவர். இந்நிலையில் கடந்த 7ம்தேதி இரவு ரவி வேலை செய்யும் இடத்திற்கு சென்ற இளையராஜா, அவரிடம் புதிய கார் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த இளையராஜா, தனது தந்தை ரவியை ஆத்திரத்தில் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்டு காயமடைந்த ரவியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரவி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர்.
