×

மதுரை போலீஸ் பூத்தில் வாலிபர் தற்கொலை; என் மகன் சாவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்… தாய் கண்ணீர்

மதுரை: மதுரையில் தீக்குளித்து இறந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக என் மகன் சாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாமென தாய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன் (40). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அவுட்போஸ்ட் பகுதி போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றாததை கண்டித்து தீக்குளித்ததாக ஆடியோ வெளியானது. மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த இவரது உடலுக்கு, பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். எஸ்பி அரவிந்த், துணை கமிஷனர் அனிதா, தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன்பிறகு தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் உடலை வாங்க மறுத்து, அர்ஜூன் சம்பத், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகி திருமாறன்ஜி உள்ளிட்டோருடன் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை பிணவறை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூர்ணசந்திரனின் தாயார் காளீஸ்வரி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களிடம் சென்று, ‘‘காலில் விழுந்து கேட்கிறேன்.. என் பையனுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி. ஆனால் இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். என் மகன் உடல் வேண்டும்’’ என கண்ணீர் மல்க கதறினார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். பிறகு பூர்ணசந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Madurai ,Poornasandran ,Narimedu ,Madurai.… ,
× RELATED ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் சோகம் ஒரே...