விருதுநகர், டிச. 19: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 2 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சைகள் மூலம் எடை அதிகரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம், கொடுவாயை சேர்ந்தவர் ரஜினி(39). இவரது மனைவி ராணி(28). இவர்களுக்கு 8 வயதில் குழந்தை உள்ளது. ராணி மீண்டும் கர்ப்பமான நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு பனிக்குடம் உடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இதில் 2 ஆண் குழந்தைகளும் எடை குறைவாக இருந்தன. ஒரு குழந்தை 1.300 கிகி, மற்றொரு குழந்தை 1.500 கிகி வரை இருந்தது. இதையடுத்து மகப்பேறு மருத்துவ பிரிவு துறை தலைவர் கீதா, குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவர் சங்கீத் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம், நுரையீரல் வளர்ச்சிக்குரிய மருந்து ஆகிய உயர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் வெப்பநிலை சீராக கிடைக்கவும் தாய் மூலம் கங்காரு பராமரிப்பு சிகிச்சை வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கி மூலம் 10 நாட்களுக்கு மேலாக தாய்ப்பால் வழங்கப்பட்டது. இதில் இரு குழந்தைகளும் தலா 200 கிராம் வரை எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலைக்கு வந்தன. இதையடுத்து குழந்தைகளை முழு உடல் நலத்துடன் நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறப்பான முறையில் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை முதல்வர் ஜெய்சிங், கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, மருத்துவ அலுவலர் வைஷ்ணவி ஆகியோர் பாராட்டினர்.
