சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சேலம், ஜன.20: சேலத்தில் 4 நாட்கள் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், இதுவரை 3,016 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,169 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதற்காக 27,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 33 குளிர்சாதன பெட்டிகள், 1,29 லட்சம் சிரிஞ்சுகள் கொண்டு வரப்பட்டது. இதனை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் சேமிக்கப்பட்டு, 12 மையங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம், ஆத்தூர் சுகாதார மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் என 25,318 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4வது நாளாக நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி போட்டு கொள்வதில் முன்கள பணியாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். கடந்த 16ம் தேதி 288 பேருக்கும், 17ம் தேதி 143 பேருக்கும், நேற்று முன்தினம் 1,416 பேருக்கும், நேற்று 1,169 பேருக்கும் தடுப்பூசி போட்டப்பட்டது. இதையடுத்து 4 நாளில் 3,016 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் விடுமுறை காரணமாக பலர் தடுப்பூசி போடுவதற்கு வரவில்லை. தற்போது, அதிகளவில் முன்கள பணியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,169 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3,016 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் இதுவரை யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முன்கள பணியாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். வரும் நாட்களில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்,’’ என்றனர்.

Related Stories:

>