கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தவெக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பொன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2 வாரத்துக்கு முன் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழுவினர் கரூர் வந்தனர்.
அவர்கள் சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தை பார்வையிட்டனர். இக்குழுவினரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் மனு அளித்தனர். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் இயங்கி வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் இன்று காலை வந்தார். கையில் சில கோப்புகளுடன் வந்த அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
