சோழவந்தான், டிச. 17: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள பாலமுருகன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்காக கார்த்திகை முதல் நாளிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை கடைசி சோமவார நாளான நேற்று முன்தினம் காலை யாகசாலை துவங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் பாலமுருகன், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் சிலைகளுக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பாலமுருகன் மின் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சுவாமிக்கு வீடுகள்தோறும் பக்தர்கள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைச் செல்வம், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், ராமநாதன், காசிராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
