புதுச்சேரி: புதுச்சேரியில் டெல்லியை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து அனுப்பி நாடு முழுவதும் விற்ற ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் உள்பட 13 பேர் கைதான நிலையில் போலி மருந்து மோசடி வழக்கை சிபிசிஐயுடன், கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணையில் இறங்கியது. பல்வேறு முன்னணி கம்பெனிகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகளை வடமாநிலங்களுக்கு சப்ளை செய்வதற்காகவே புதுச்சேரியில் 2 கம்பெனிகளை ராஜா நடத்தி வந்துள்ளார்.
அந்த கம்பெனிகளின் கணக்கு வழக்குகள் மற்றும் நிர்வாகத்தை கவனித்து வந்த புதுச்சேரி அரியாங்குப்பம், பூங்கொடிபுரத்தைச் சேர்ந்த சுதாலட்சுமி (34), அவரது கணவர் அசோக்ராஜ் (37), உழவர்கரையைச் சேர்ந்த ராஜேஷ் (40) ஆகிய 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், எந்தெந்த கம்பெனிகளின் பெயரில், எவ்வளவு போலி மருந்துகள், எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பி மோசடி செய்துள்ளனர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
