×

11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு விவகாரம்; இபிஎஸ் மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் முடித்துவைப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், ஒன்றிய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆனால், சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மனுதாரரின் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. இதில், புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரியவந்ததால் அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இல்லை என்று புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கம் அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : EPS ,Tamil Nadu government ,Madras High Court ,Chennai ,AIADMK ,Tamil Nadu ,Tiruvallur ,Ariyalur ,Kallakurichi ,Namakkal ,Ramanathapuram ,Dindigul ,Nagapattinam ,Virudhunagar ,Tiruppur ,Krishnagiri ,Nilgiris ,Former ,Chief Minister ,Edappadi Palaniswami ,Public ,Works ,Department ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம்...