சேலம், டிச.17: சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள், மொத்த மருந்து கடைகளை அவ்வப்போது மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சேலம் மாவட்டம் வாழப்பாடி, நாமக்கல் டவுனில் விதிமுறையை மீறி செயல்பட்ட 2 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையும் மீறி ஒரு சில மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு தடை செய்துள்ள சளி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து வருகிறோம். ஒரு சில கடைகளில் இந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்,’’ என்றனர்.
