டெல்லி : கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நேரம் குறித்து அறிந்து கொண்டு பயணிகள் விமான நிலையத்துக்கு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் தாமதமாகி வருகிறது. விமானங்களின் தரையிறக்கமும் தடைபட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி நிலவரப்படி, 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 4 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மோசமான சூழலைக் கருத்தில் கொண்டு, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகிய மூன்று முக்கிய விமான நிறுவனங்களும் பயணிகளுக்கான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன. “பனிமூட்டம் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வானிலையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,” என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி விமான நிலையத்தைத் தவிர, ஜெய்ப்பூர், ஹிண்டன் விமான நிலையம் மற்றும் சிம்லா உட்பட வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்களும் இந்த பனிமூட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பும் முன் தங்கள் விமானத்தின் நிலையைத் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்று விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
