×

பெரம்பலூர் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்

பெரம்பலூர்,டிச.15: பெரம்பலூர் நகராட்சியில் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த புகை மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை தொடர்ச்சியாக பெய்து முடிந்த நிலையில் தற்போது விட்டு விட்டு மழைப் பொழிவும், விடாமல் பனிப்பொழிவும் காணப்பட்டு வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைப் பரவச் செய்யும் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொசுக்களால் வரைஸ் காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் டெங்கு மலேரியா போன்ற பாதிப்புகளும் பரவலாகத் தென்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி உத்தரவின் பேரில், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், நகராட்சி ஆணையர்(பொ) கண்ணன் ஆகியோரது அறிவுறுத்தல் பேரில், பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பிரதான பகுதிகளுக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் கொசு மருந்து புகை மருந்தாக தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வார்டு பகுதிகளில் புகை மருந்து தெளிப்பது போல், கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த புகை மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரம்பலூர் நகராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகளும், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும், பாதாள சாக்கடைத் திட்ட சீரமைப்பு பணிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதோடு கொசுக்களின் பாதிப்பை கட்டுப்படுத்த மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகளும், தேங்கி நிற்கும் மழைநீரை, கழிவுநீரை அகற்றும் பணிகளும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.

Tags : Perambalur Municipality ,Perambalur ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...