×

செம்பனார்கோயில் அருகே வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் அனுபவ பயிற்சி திட்டம்

செம்பனார்கோயில், டிச.15: செம்பனார்கோயில் பகுதியில் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் அனுபவ பயிற்சி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பிரதான தொழிலாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல், பருத்தி, வாழை, உளுந்து பயறு, கரும்பு போன்ற விளை பொருட்களை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது நடப்பு சம்பா, தாளடி பருவத்தை முன்னிட்டு நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் செம்பனார்கோயில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில், கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செயல்விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேளாண்மை கல்லூரியின் 4ம் ஆண்டு மாணவிகள் திவ்யா, சிவரஞ்சனி, தர்ஷனா, ஜெஸிமா, மனோப்பிரியா மற்றும் சுவேதா ஆகியோர் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயி பாலகிருஷ்ணன் என்பவர் வயலில் விதை நேர்த்தி குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

அப்போது ஏஎஸ்டி-21 நெல் வகையில் பயோகண்ட்ரோல் ஏஜென்ட் பேசிலஸ் சப்டிலிஸ் மூலம் விதை நேர்த்தி செய்து காண்பித்தனர். விதை நேர்த்தியில் பயன்படுத்தப்படும் பல்வேறு உயிர் உரங்கள், உயிர் கட்டுப்பாட்டு முகவர்கள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் குறித்தும் விளக்கினர். மேலும் ஊட்டச்சத்துக்களை பயிர்களின் வளர்ச்சிக்கு தெளிப்பது குறித்தும், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட், அதன் நன்மைகள் குறித்தும் தெரிவித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags : Agricultural College ,Sembanarkoil ,Mayiladuthurai ,
× RELATED ரேஷன் அட்டைகள் சிறப்பு குறைதீர் முகாம்