×

கும்பகோணம் அரசு இல்லத்தில் போலி ஐஏஎஸ் கைது: சென்னையை சேர்ந்தவர்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்- காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு திட்ட இல்லம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த இல்லத்துக்கு சென்னை தியாகராய நகர் சாதுல்லா தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (68) என்பவர் வந்து, தான் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி காப்பாளர் பாஸ்கரிடம் தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அதற்கு பாஸ்கர் அறை இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வயதானவர் என்பதால் வேறு வழியில்லாமல் ஒரு அறையை அந்த காப்பாளர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். பின்னர் ராமகிருஷ்ணன் மீது சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காப்பாளர் பாஸ்கர், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார், ராமகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டதில், மகாராஷ்டிராவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், தமிழகத்தில் பல்வேறு உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார். ஆனால் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, அவர் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்றும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்றால் இலவசமாக தங்கலாம் என்பதால் கும்பகோணம் கோயிலுக்கு வரும்போதெல்லாம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி இந்த திட்ட இல்ல அலுவலகத்தில் இலவசமாக தங்கி ஏமாற்றி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார், 68 வயதானவர் என்பதால் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags : IAS ,Kumbakonam government ,Chennai ,Kumbakonam ,Public Works Department ,Kumbakonam-Karikal road ,Thanjavur district ,Ramakrishnan ,Satulla Street, Thyagaraya Nagar, Chennai ,IAS… ,
× RELATED ரூ.10,000 லஞ்சம்: எஸ்ஐ கைது