×

வளைகுடா பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை எகிறியது பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம்: ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிப்பு; போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்

புதுடெல்லி: வளைகுடாவில் 3வது நாளாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளதால், இப்போர் நீடிக்கும் பட்சத்தில் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாகி வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாக குற்றம்சாட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி கூட்டு தாக்குதலை தொடங்கின.

இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஈரான் ராணுவம் இஸ்ரேலை மட்டுமின்றி அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பக்ரைன், ஜோர்டான் மீது ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. 3வது நாளாக இப்போர் நேற்று தீவிரமடைந்து, விரிவடைந்தும் வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நேற்று போர் விமானங்கள் மூலமாகவும், போர்க் கப்பல்களில் இருந்தும் பயங்கர தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தனது கெய்பர் ஷேகன் ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் ஈரானின் 500 கிலோ எடை கொண்ட பெரிய ஏவுகணை இஸ்ரேலின் பெய்த் ஷிமெஸ் பகுதியில் குடியிருப்பு கட்டிடத்தை நொறுக்கியதில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர். இஸ்ரேல் மீது இடைவிடாமல் ஏவுகணைகளை வீசி தாக்கும் ஈரான், வளைகுடாவில் உள்ள கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளையும் விட்டு வைக்காமல் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. அவற்றை அந்நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்து அழித்து வருகின்றன.

சைப்ரசில் உள்ள இங்கிலாந்து விமானப்படை தளத்தின் மீதும் ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கையை எடுக்க தயாராகி இருப்பதாக தெரிவித்துள்ளன. ஈரானை வழிக்கு கொண்டு வர அதன் அணுசக்தி மையங்களை தகர்க்கும் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசும் பி-1 பாமர்ஸ் போர் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து நேற்று ஈரான் நோக்கி புறப்பட்டுள்ளன. இதனால், இப்போர் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கு நீடிக்கும் என இஸ்ரேல் கணித்துள்ள நிலையில், இப்போதே உலக பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட அனைத்து சர்வதேச பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவில் சென்செக்ஸ் 2.1 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பும் எகிறியதால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது. அமெரிக்க பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 9% அதிகரித்து 73 டாலராக உயர்ந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10 சதவீதம் உயர்ந்து 80 டாலராக அதிகரித்தது. அடுத்த ஓரிரு நாட்களில் கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலரை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாக உலக அளவில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் உலக அளவில் விலைவாசி அதிகரிக்க வழிவகுக்கும். இதுமட்டுமின்றி, ஹார்மஸ் ஜலசந்தி பகுதியை கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் பயன்படுத்த கூடாது என ஈரான் தடை விதித்துள்ளதால் பல கப்பல்கள் அங்கு தேக்கமடைந்துள்ளன. இது ஆசிய நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி அரேபிய தீபகற்பத்தில் ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கிறது. ஹார்மஸ் ஜலசந்தி வெறும் 2 மைல் அகலம் மட்டுமே கொண்ட மிகவும் குறுகிய கடல் வழிப்பாதை. உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இவ்வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, சவூதி அரேபியா, ஈராக் மற்றும் ஈரான் உள்ளிட்ட முக்கிய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய்க்கான முக்கிய போக்குவரத்து பாதையாக ஹார்மஸ் ஜலசந்தி உள்ளது.

கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இயற்கை எரிவாயு உலக சந்தைகளில் நுழைவதற்கான ஒரே பாதையாக இது இருக்கிறது. இந்த பாதையை ஈரான் முடக்கி இருப்பதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தடைபட்டு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இப்பாதை முழுமையாக தடுக்கப்பட்டால், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய 4 ஆசிய நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இந்த நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் 75 சதவீத எண்ணெய் மற்றும் 59 சதவீத இயற்கை எரிவாயு இந்த ஜலசந்தி வழியாக செல்கின்றன.

எனவே பெரும் பாதிப்பை சந்திப்பதில் ஜப்பான், தென் கொரியா முதல் 2 இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வங்கி மற்றும் சந்தை நிபுணரான அஜய் பக்கா கூறுகையில், ‘‘ஹார்மஸ் ஜலசந்தியில் ஏற்படும் குறுகிய கால விநியோக இடையூறுகள் கூட காப்பீட்டு பிரீமியங்கள், சரக்கு கட்டணங்களை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால், கச்சா எண்ணெய் 150 டாலர் அல்லது அதற்கு மேல் கூட உயரக்கூடும். கச்சா எண்ணெயில் ஒவ்வொரு 10 டாலர் அதிகரிப்பும் இந்தியாவின் பணவீக்கத்தை 0.5% வரை அதிகரிக்கும். எனவே இது வெறும் போர் மட்டுமல்ல, உலகளாவிய பொருளாதார பிரச்னையும் கூட. 7 முதல் 10 நாட்களில் இப்போர் நிறுத்தப்பட்டால் நிலைமையை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார்.

கச்சா எண்ணெய் வெறும் எரிபொருளுக்கு மட்டுமல்ல, சோப்பு, ஷாம்பு, கிரீம், ஹேர் ஆயில், பாட்டில்கள் மற்றும் குழாய்கள் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு கவிக்கின்றன. இதனால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை 25 சதவீதமும், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகரிக்கும் என தனியார் நிறுவன சிஇஓ அபிஜித் தெரிவித்துள்ளார். எனவே அடுத்த 72 மணி நேரத்தில் போர் ஓயாவிட்டால் இந்தியாவில் பிஸ்கட் விலை கூட அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

* ரஷ்ய எண்ணெய் மிகவும் குறைப்பு
உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வந்த நிலையில், அமெரிக்காவின் வர்த்தக வரி அச்சுறுத்தலால் பெருமளவில் குறைத்துள்ளது. மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் கடந்த மாதம் 20 சதவீதத்திற்கும் குறைவாக ரஷ்ய எண்ணெயை குறைத்தது. இது 2022க்குப் பிறகு மிகக் குறைந்த இறக்குமதி அளவாகும். ஈராக்கிடம் 17.1%, யுஏஇயிடம் 12%, சவுதியிடம் 9%, அமெரிக்காவிடம் 5% எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. மொத்த தேவையில் 88 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

* அரசு அவசர ஆய்வு
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக ஒன்றிய எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் அமைச்சக மற்றும் பொதுத்துறை மூத்த அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். சமையல் எரிவாயு தேவையில் இந்தியா 50 சதவீதம் வெளிநாடுகளை நம்பி உள்ளது. இந்த ஆலோசனை குறித்து அமைச்சக எக்ஸ் பதிவில், ‘சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாட்டில் முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

* இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்தேன். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொள்ள வலியுறுத்தினேன். போர்களை முன்கூட்டியே நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது’’ என கூறி உள்ளார்.

* எரிவாயு உற்பத்தியை
நிறுத்திய கத்தார் எனர்ஜி
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தார் அரசுக்கு சொந்தமான கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்துவதாக நேற்று அறிவித்துள்ளது. எரிவாயு சப்ளையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் கத்தார் எனர்ஜி குறிப்பிடத்தக்கது. போர் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், எந்த காலக்கெடுவும் இல்லாமல் கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியிருப்பது விலை உயர்வை மேலும் மோசமாக்க வழிவகுக்கும். ஐரோப்பிய நாடுகளில் நேற்றே எரிவாயு விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

* சவுதி எண்ணெய் ஆலை மீது தாக்குதல்
உலகின் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சவுதி அரேபியாவின் அராம்கோவுக்கு சொந்தமான ராஸ் தனுரா சுத்திரிப்பு ஆலை மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. 2 டிரோன்கள் தடுத்து அழிக்கப்பட்டாலும் அதன் சிறிய பாகங்கள் ஆலையில் விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தின. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ராஸ் தனுராவில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags : Gulf ,Iran ,Strait of Hormuz ,New Delhi ,
× RELATED அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் காயமடைந்த கமேனியின் மனைவி உயிரிழப்பு!