×

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலை மிகவும் கவலைக்குரியது: பிரதமர் மோடி!

 

டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலை மிகவும் கவலைக்குரியது என கனடா பிரதமர் மார்க் கார்னி உடனான செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடங்கி உள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவளிக்கும் வகையில் சில தீவிரவாத அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. அதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் ஈரானின் முக்கிய கூட்டாளியான லெபனானின் ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தனது முதல் மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் ஹைபா பகுதியில் உள்ள ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஹிஸ்புல்லா இன்று அதிகாலை முதல் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்ற பெயரில் பெய்ரூட் நகரில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது பிரம்மாண்ட குண்டுவீச்சை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘ஈரானின் தீவிரவாதச் செயல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது’ என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் இன்று நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 541 ட்ரோன்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீதும், கத்தாரின் தோகா நகர் மீதும் ஈரானிய ஆயுதங்கள் பாய்ந்தன. தாக்குதல் குறித்து கத்தார் தரப்பில் கூறுகையில், ‘சர்வதேச விதிகளின்படி எங்களைப் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு முழு உரிமை உண்டு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஈரானின் இந்தத் துரோகத்தனமான நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளதுடன், பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதற்றத்தைக் குறைக்க முற்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

கமேனியின் படுகொலைக்கு நீதி கேட்கும் நோக்கில், ஈரான் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுத்துள்ளது. அதற்கு லெபனான், காசா, ஏமன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்புகள் இந்தப் போரில் இணைந்துள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளது. அதன்படி ஈரான் தனது ஆதரவு அமைப்புகளான லெபனானின் ஹிஸ்புல்லா, காசாவின் ஹமாஸ், ஏமனின் ஹவுதி, ஈராக்கின் ஆயுதக் குழுக்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தீவிர பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதால் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பெரும் பிரச்னைக்கு உள்ளானது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலை மிகவும் கவலைக்குரியது என கனடா பிரதமர் மார்க் கார்னி உடனான செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Middle East ,Modi ,Delhi ,Mark Carney ,Iran ,
× RELATED பிப்ரவரி மாதத்தில் 96.40 லட்சம் பயணிகள்...