×

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலோடு புதுச்சேரி, கேரளா மாநில சட்டப்பேரவை பாதுத்தேர்தலும் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுகவில் பாஜ மட்டுமே கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கூட்டணி குறித்து முடிவு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற அதிமுக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகிற 15ம் தேதி (திங்கள்) முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று தலைமைக் கழகத்தில் வழங்கலாம்,’என்று தெரிவித்துள்ளார்.

Tags : Adimuka ,Assembly ,Edappadi Palanisamy ,CHENNAI ,ADAMUGA ,SECRETARY GENERAL ,EDAPPADI PALANISAMI ,ADAMUKA ,TAMIL NADU ,PUDUCHERRY ,KERALA ,
× RELATED 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்;...