×

லால்குடி புதிய பஸ் முனையம் கட்டுமானம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் நேரில் ஆய்வு செய்த கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை

லால்குடி, டிச.11: திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியில் கலைஞாின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24.04 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமான பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். லால்குடி நகரம் திருச்சி-அரியலூர் மாநில நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. லால்குடி நகராட்சியை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலுள்ள மக்கள் அவர்களின் அன்றாட தேவைக்காக லால்குடி நகரை அணுகுவது அத்தியாவசியமாக உள்ளது. எனவே லால்குடி நகரில் தற்போதுள்ள பஸ் நிலையம் நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்லும் நிலையிலுள்ளது.

புறநகர் பஸ்கள் வந்து செல்ல தற்போதைய பஸ் நிலையத்தில் இடவசதி இல்லாததால் பஸ் நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் புறவழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால் நகராட்சி வருமானம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும் பெரும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள். ஆகையால் லால்குடி நகராட்சிக்கு ரூ.24.04 கோடி மதிப்பில் கலைஞாின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசானை பெறப்பட்டு கடந்த 21.11.2024 பணிகள் துவங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

புதிதாக அமையவுள்ள பஸ் நிலையத்தில் 40 பஸ் நிறுத்தங்கள், 120 கடைகள், 2 உணவக கட்டிடம், 2 ஏடிஎம் மையங்கள், ஒரு ஓட்டுநர் தங்குமிடம், டூவீலர் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 5.32 ஏக்கர் பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.இந்த பஸ் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் லால்குடி நகா் மன்ற தலைவா் துரை மாணிக்கம், கமிஷனர் புகேந்திரி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags : Lalgudi ,District Collector ,Saravanan ,Lalgudi Municipality, Trichy district ,
× RELATED முசிறி அருகே 30 குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்திய அரசு பள்ளி மாணவி