சென்னை: தமிழக டிஜிபி வெங்கட்ராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருப்பவர் வெங்கட்ராமன். இவருக்கு இரு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உடனடியாக நுங்கம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இன்று அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் 15 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். இதனால், சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பொறுப்பு, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.
