டெல்லி : இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதத்தால் ஏற்படும் குழப்பத்தை தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. விமானிகளுக்கான புதிய பணி முறை விதிகளால், இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாட்களாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து பெரும் சிக்கலுக்கு ஆளானது. இதனால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். பிரச்சனைகள் முழுமையாக சரி செய்யப்படாவிட்டாலும் மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி அந்த நிறுவனம் திரும்பி வருகிறது.
இந்த நிலையில், இண்டிகோ விமானங்கள் திடீரென்று ரத்தானது மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டிகே உபாத்யாயா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், ‛‛இண்டிகோ விமான சேவை ரத்து, தாமதத்தால் ஏற்படும் குழப்பத்தை தடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் முடங்கியது கவலை அளிக்கிறது. திடீரென ஒரு நெருக்கடி ஏற்படும்போது பிற விமான நிறுவனங்கள் எப்படி விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை டிக்கெட் கட்டணம் வசூலித்து லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டன?. இத்தகைய நிலைமை மோசமானது.”என தெரிவித்தது.
இதையடுத்து ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, ‛‛இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‛‛இந்த நடவடிக்கைகள் பிரச்சனை வந்த பிறகு தான் எடுக்கப்பட்டன. முதலில் இந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது?, விமான நிலையங்களில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்) மற்றும் இன்டிகோ விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டது.

