திருமலை: ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 233 மையங்களில் மார்கழி திருப்பாவை சொற்பொழிவு நடப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் புனித மார்கழி மாதத்தை கொண்டாடும் வகையில், புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களை கொண்டு வரும் 16ம் தேதி முதல், 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வரை, நாடு முழுவதும் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
இதில் ஆந்திராவில் 76 மையங்களிலும், தெலுங்கானாவில் 57 மையங்களிலும், தமிழ்நாட்டில் 73 மையங்களிலும், கர்நாடகாவில் 21 மையங்களிலும், பாண்டிச்சேரியில் 4 மையங்களிலும், புதுதில்லியில் 4 மையங்களிலும், ஒடிசாவில் தலா ஒரு மையத்திலும் திருப்பாவை சொற்பொழிவு நடத்தப்படும். ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு மாற்றாக திருப்பாவை பாராயணம் செய்யப்படுகிறது. திருப்பதி கே.டி.சாலையில் உள்ள அன்னமாச்சார்யா காலமந்திரம் மற்றும் வரதராஜ சுவாமி கோயிலில் திருப்பாவை சொற்பொழிவு பாராயணம் நடைபெறும். இவ்வாறு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
