×

டிச.11ல் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு நிறைவு: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்: 10 மணி நேரம் நடக்கிறது

 

புதுடெல்லி: வரும் 11ஆம் தேதி எஸ்ஐஆர் கணக்கெடுப்பு நிறைவடையும் நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று அது குறித்த விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவாதம் நடக்கிறது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளா தவிர மற்ற மாநிலங்களில் இந்த பணி நாளை மறுநாள் நிறைவடைய உள்ளது. பீகாரில் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதுபோல் மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும், எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு வரும் 11ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஆளும் கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் 59 லட்சம் முதல் 85 லட்சம் வரையிலான வாக்காளர்களும், மேற்கு வங்கத்தில் 46 லட்சம் வாக்காளர் பெயர்களும் நீக்கப்பட உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளின் போது 40 அதிகாரிகள் பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி தேர்தல் ஆணையத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்து இருந்தது.

இந்த பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இதை தொடர்ந்து அவைத்தலைவர் ஓம்பிர்லா அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்த ஆளும் பா.ஜ அரசு ஒப்புக்கொண்டது. இதற்காக சுமார் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (டிச. 9) நண்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SIR ,New Delhi ,Bihar ,Tamil Nadu ,West Bengal ,Kerala ,
× RELATED தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு...