×

தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

இன்று (08.12.2025) புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், மற்றும் இரா.சுப்பிரமணியன், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு உறுப்பினர், தற்பொழுது (08.12.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டி.எம்.சி ஆக உள்ளது என்றும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,282 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 2,986 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதம் கடைசி வாரத்திலும் மற்றும் டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும் டித்வா புயலினால் பெய்த கன மழை காரணமாக பயிர்சேதம் ஏற்பட்டுள்ளதால், சேதம் ஏற்பட்ட பரப்பளவின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025, டிசம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 7.35 டி.எம்.சி, நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.

கர்நாடகம், தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிலும் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று பாசன திட்டங்களை செயல்படுத்தி சாகுபடி செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணையம் இத்திட்ட விவரங்களை பெறவும் வலியுறுத்தினார்.

Tags : Kaviri Water Management Commission ,Karnataka ,Kaviri ,Tamil Nadu ,New Delhi, S. K. ,Haldar ,Water Department ,J. Jayakandan ,Ira. Subramanian ,Kaviri Technical Group ,Multinational River Water Division ,
× RELATED எனது துறையின் சாதனைகளை மறைத்து...