கோவை: கோவையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். முதல் கட்டம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துள்ளது. அது சம்மந்தமாக பாஜ தேசிய தலைவர் ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் 12 மாநிலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் தலைவர்கள் வருகிறார்கள். இதில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.
அதேபோல காசி தமிழ் சங்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். அரசியலுக்கும், டெல்லி பயணத்திற்கும் சம்மந்தம் இல்லை. கோவையில் ஓபிஎஸ் கட்சி நிர்வாகியின் குடும்ப விழாவில், ஓபிஎஸ்-ஐ சந்தித்தல் அரசியல் எதுவும் இல்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் கூட்டணியில் இருக்கிறார், இல்லை என்பது இரண்டாவது. அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் என நினைக்கிறேன். பரஸ்பரம் அன்பு இருக்க வேண்டும். மற்றபடி அரசியல் பேச வேண்டும் என எதுவும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தேர்தல் சூடு எதுவும் இப்போது இல்லை. மிக வலுமையாக கூட்டணி வரும். நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம்.
காங்கிரசை இந்திய அளவில் மக்கள் ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 30, 35 சீட் கொடுக்கும் அளவிற்கு காங்கிரஸ் வளர்ந்துள்ளதா? இந்தியா முழுவதும் காங்கிரஸின் தோல்வி முகத்தை தான் பார்க்கிறோம். பீகாரே கிளாசிக்கான எடுத்துக்காட்டு. 60 இடங்களில் 6 இடங்கள் ஜெயித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 60 சீட்டில் ஆரம்பித்த காங்கிரஸ் தற்போது 25 சீட்களில் இருக்கிறார்கள். நேர்மையாக வேறுபக்கம் போகமாட்டார்கள் என்பது எனது கருத்து. தேஜகூ பொறுத்தவரை இன்னும் வர வேண்டியவர்கள், வர இருப்பவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் 2 மாதம் அரசியல் களம் உள்ளது. மிக பக்குவமாக நகர்த்தி கொண்டு போனால், வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
