பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பழநி, ஜன. 13: பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரும் 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவிற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பழநியாண்டவர் கல்லூரி வளாகத்தில் நடந்தது.  கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகிக்க, கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார். இதில் டிஐஜி முத்துச்சாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, கோட்டாட்சியர் அசோகன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை மேற்கொண்டவரை அடையாளம் காணும் வகையில் பக்தர்களின் கையில் பச்சை நிற ஒளிரும் பட்டைகள் ஒட்ட வேண்டும்.

பக்தர்கள் நீராடும் சண்முகாநதி, இடும்பன் குளம் பகுதிகளில் ரப்பர் படகுடன் கூடிய மீட்பு வீரர்களை தீயணைப்புத்துறை சார்பில் 24 மணிநேரமும் பணியமர்த்த வேண்டும். இரவு நேரங்களில் பாதயாத்திரை வரும் பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்காக 1.50 லட்சம் ஒளிரும் பட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்.    பாதுகாப்பு பணிக்காக திருவிழா காலங்களில் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்த வேண்டும். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மலைக்கோயில், அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்காத வகையில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். மண்டப படிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்ட்டன. கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>