×

விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு

பெங்களூரு: இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்த பயணிகளுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கி உதவிய பெங்களூரு விமான நிலைய ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாட்களாகக் கடுமையான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புதிய பணி நேர விதிகள் அமலாக்கம், பனிமூட்டம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போதிய ஊழியர்கள் இல்லாமல் விமானச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக விமான நிலையங்களிலேயே ஆயிரக்கணக்கான பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த இக்கட்டான சூழலில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு, அங்குள்ள தரைதள ஊழியர்கள் தேநீர், காபி மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி ஆறுதல் அளித்தனர்.

விமான நிறுவனத்தின் தரப்பிலிருந்து முறையான உதவிகள் கிடைக்காத நிலையில், விமான நிலைய ஊழியர்கள் தாமாக முன்வந்து செய்த இந்த உதவி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பிரியா தியாகி என்பவர் வெளியிட்ட இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ‘இதுதான் உண்மையான விருந்தோம்பல்’ என்றும், ‘பெங்களூருவின் கலாசாரமே இதுதான்’ என்றும் ஊழியர்களின் மனிதாபிமான செயலை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், வரும் 10 முதல் 15ம் தேதிக்குள் சேவைகள் அனைத்தும் சீராகும் என்று விளக்கம் அளித்துள்ளது.

Tags : Bengaluru airport ,Bengaluru ,IndiGo ,India ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...