புதுடெல்லி: புரோ ரெஸ்ட்லிங் லீக் (பிடபிள்யுஎல்) மல்யுத்த போட்டிகளுக்கான ஏலத்தில் பங்குபெற, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். ஐபிஎல் போன்று நடத்தப்படும் பிடபிள்யுஎல் மல்யுத்த போட்டிகள் டெல்லியில் மட்டும் நடத்தப்படும் என அதன் அமைப்பாளர்கள் முன்னர் கூறியிருந்தனர். அதன்பின் கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக 4 சீசன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன. இந்நிலையில், பிடபிள்யுபிஎல் போட்டிகள் வரும் 2026 ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை, நொய்டாவில் உள்ள இண்டோர் ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ‘இந்தியாவில் நடத்தப்படும் பிடபிள்யுபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் பங்கேற்க, 20 நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களும் உள்ளனர்’ என்றார். டபிள்யுபிஎல் போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும், 4 மல்யுத்த வீராங்கனைகள் உட்பட 9 பேர் இடம்பெறுவர். இவர்களில் 5 பேர் இந்தியாவை சேர்ந்தவராகவும், 4 மல்யுத்த வீரர் அல்லது வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
