×

சினிமா பிரபலங்களுக்கு போதை பொருட்கள் சப்ளை: நடிகர் சிம்பு மேனேஜரிடம் போலீஸ் விசாரணை

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் போதை ஸ்டாம்ப், ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர போதை பொருள் தடுப்பு பிரிவு நுண்ணிறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கடந்த மாதம் 21ம் தேதி நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜர் சர்புதீன் (44) மற்றும் சென்னை பாடிக்குப்பத்தை சேர்ந்த தியானேஷ்வரன் (25), வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சரத் (30), சட்ட கல்லூரி மாணவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து போதை பொருள்கள், போதை ஸ்டாம்ப்கள், ஓஜி கஞ்சா மற்றும் ஒரு கார், 27.91 லட்ச ரூபாய், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் சர்புதீன், சரத் ஆகியோரை கஸ்டடியில் விசாரணை செய்வதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் திருமங்கலம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை செய்யலாம்’’ என உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று 2 பேரையும் புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது, சர்புதீன், நடிகர் சிம்புவுக்கு மேலாளராக பணியாற்றியதுடன் பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கத்துடன் இருந்துள்ளது பற்றியும் அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருள்கள் சப்ளை செய்துள்ளார் என்பதும் பற்றியும் சினிமா பிரபலங்களுக்கு தனது வீட்டில் போதைப்பொருள் விருந்து வைத்துள்ளது குறித்தும் சரத், இவரது நண்பர்களுக்கு போதைப்பொருள், ஓஜி கஞ்சா சப்ளை செய்துள்ளாரா என்பதும் குறித்தும் சர்புதீன் செல்போனில் யார், யார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பதும் குறித்தும் இணையதளம், இன்ஸ்டாகிராம் பக்கம், பேஸ்புக் ஆகிய தொடர்புகள் குறித்தும் விசாரித்துள்ளனர். இதனிடையே போலீஸ் கஸ்டடி முடிந்ததும் இன்று மாலை மீண்டும் 2 பேரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Tags : Simbu ,Annanagar ,Chennai Metropolitan Narcotics Control Unit ,Thirumangalam ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்...