×

சென்னையில் விஜய்யுடன் ரகசிய சந்திப்பு காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைகிறார்? மயிலாப்பூர் தொகுதி கேட்டு டிமாண்ட்; காங்கிரசார் கடும் அதிருப்தி

சென்னை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சென்னையில் நடிகர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசினார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அடங்கிய ஐவர் குழுவை நியமித்தது. இந்த குழு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வந்த காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு குழுவின் அகில இந்திய தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி, கட்சி தலைமைக்கு தெரியாமல் நேற்று விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசினார்.

இதன் மூலம் பிரவீன் சக்ரவர்த்தி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சம்பந்தமே இல்லாத மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தவர். திமுக தான், தனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை தடுத்து விட்டதாக குற்றம்சாட்டினார். ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்டவர் என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான், வரும் சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்க உள்ளதாக திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் தனக்கு மயிலாப்பூர் தொகுதி கிடைக்க வாய்பு குறைவு என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, தவெகவில் இணைந்து மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, விஜய் உடனான சந்திப்பின் போது மயிலாப்பூர் தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி டிமாண்ட் வைத்ததாகவும் தகவல் வெளியாகி இருப்பது காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vijay ,Chennai ,Congress ,Praveen Chakravarthy ,Thavega ,Mylapore ,Girish Chodankar ,Tamil Nadu ,Selvapperundhakai ,DMK ,
× RELATED திமுக வடக்கு மண்டல இளைஞரணி...