சென்னை: பொங்கலுக்காக வழங்கப்படும் வேட்டி சேலை திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, மலிவான அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி சேலைகள் வழங்குப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2,800 கைத்தறி நெசவாளர்கள், 11,300 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 66,000 விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல்கள் கூட்டுறவு நூற்பாலைகள், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு ஒளிவுமறைவற்று ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பொங்கல் 2025 திட்டத்திற்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொள்முதல் முகமை நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி பண்டல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தரப்பரிசோதனையின்போது பாலிகாட் பாவு நூலில் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளைவிட பாலியஸ்டர் சதவீதம் அதிகமாக உள்ளதென கண்டறியப்பட்ட சுமார் 13 லட்சம் வேட்டிகள் கொண்ட பண்டல்கள், நிராகரிக்கப்பட்டது. உண்மைநிலை இவ்வாறிருக்க, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், நடப்பு பொங்கல் 2026 திட்டத்தின்கீழ் 17 லட்சம் வேட்டிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
வேட்டி சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக எவ்வித ஆதாரமற்ற, முற்றிலும் உண்மைக்கு புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார். நடப்பாண்டு பொங்கல் 2026 திட்டத்திற்கான வேட்டி சேலைகள் அனைத்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, 93% வேட்டி சேலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடிமை பழனிசாமி, இனிமேலாவது மலிவான அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
