×

‘நான் எப்போ தனிக்கட்சி ஆரம்பிப்பேன்னு சொன்னேன்?’ முடிவு எடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறல்

சென்னை: தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று நான் சொல்லவே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி சென்னையில் அவரது சமாதிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 15ம் தேதி நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை. இதுபோன்ற கேள்விகள் கேட்பதை தவிர்க்க வேண்டும். செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அதன்பிறகு அவர் என்னிடம் பேசவும் இல்லை, நானும் அவரிடம் பேசவில்லை. அடுத்தக்கட்ட நகர்வு அதிமுக தொண்டர்களின் எண்ணப்படிதான் இருக்கும். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் இருக்கிறது. இப்போது எதற்கு அவசரம்? பொறுத்திருங்கள், நல்ல செய்திகள் வரும்.

அதிமுகவில் இருந்து பலரும் திமுகவில் இணைந்து வருவதாக கேட்கிறீர்கள். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதிமுக என்பது அனைத்து தொண்டர்களின் இயக்கம் ஆகும். தொண்டர்களின் பலம், எந்த சூழ்நிலையிலும் எம்ஜிஆர் இயக்கம் பழுதுபடாது. நாங்கள் தனியாக இல்லை. எங்களுடைய நோக்கம், கொள்கை ஒன்றுதான், பிரிந்து இருக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்றுதான் நான் டெல்லி சென்றபோது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சொல்லி விட்டு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவின் தற்போதைய தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் என அனைவரும் தன்னை ஒதுக்கிய பிறகு, ஓ.பன்னீர்செல்வம் உறுதியான ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாகவே அவரது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags : OPS ,Chennai ,O. Panneerselvam ,Jayalalithaa ,AIADMK ,Chief Minister ,
× RELATED திமுக வடக்கு மண்டல இளைஞரணி...