பானிபட்: தன்னைவிட அழகாக இருந்ததால் சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற பெண்ணை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் பானிபட் பகுதியைச் சேர்ந்த பூனம் என்ற 32 வயதுப் பெண், தனது உறவினர்களின் குழந்தைகள் தன்னைவிட அழகாக இருப்பதாகக் கருதி அவர்கள் மீது கடும் பொறாமை கொண்டு வந்துள்ளார். இந்தக் குரூர எண்ணத்தின் காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவைத் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.
பின்னர் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, தனது சொந்த மகனான 3 வயது சுப்பமையும் அதே பாணியில் தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் உறவினர் ஒருவரின் 6 வயது மகள் ஜியாவையும் கொலை செய்தார். இவை அனைத்தும் விபத்து என்றே அந்த குடும்பத்தினர் நம்பி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி நடைபெற்ற திருமண விழாவின்போது, தனது அண்ணன் மகளான 6 வயது விதியைப் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பூனம் கொலை செய்துள்ளார். இம்முறை பூனமின் ஆடைகள் ஈரமாக இருந்ததைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பூனம் 4 குழந்தைகளையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இது குறித்துப் போலீசார் கூறுகையில், ‘தன்னைவிட அல்லது தனது குடும்பத்தைவிட மற்றக் குழந்தைகள் அழகாக இருப்பதைப் பூனாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என்ற மனநோயாளியைப் போல அவர் செயல்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தனர். தனது சொந்த மகன் என்றும் பாராமல் 4 பிஞ்சு உயிர்களைப் பறித்த இப்பெண்ணுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
