×

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முற்றுகை மேற்கு வங்கத்தில் பூத் அதிகாரிகள் போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பூத் அதிகாரிகள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அதிகாரிகள் பலர் பணிச்சுமை ஏற்பட்டு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெரும்பாலான அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் முன், வாக்குச்சாவடி அதிகாரிகள் ரக்‌ஷா கமிட்டி உறுப்பினர்கள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஏராளமான வாக்குச்சாவடி அதிகாரிகள் அங்கு திரண்டு முழக்கங்களை எழுப்பினார்கள். இதனிடையே பாஜ எதிர்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இதனையொட்டி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பாஜ பிரதிநிதிகள் குழு அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு சில நிமிடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக்களை உடைத்து அலுவலகத்திற்குள் செல்வதற்கு முயன்றனர். மேலும் கோரிக்கை மனு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை திரும்பிச்செல்லும்படியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டம் முடிந்து திரும்பிய சுவேந்து அதிகாரி, ஊடுருவல்காரர்களை கொண்ட தனது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் இந்த சிறப்பு தீவிர திருத்தம் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது என்பதை இந்த போராட்டங்கள் காட்டுகின்றன” என்றார்.

Tags : West Bengal ,Chief Electoral Officer ,Kolkata ,Chief Election Officer ,
× RELATED சுஷ்மா ஸ்வராஜ் கணவர் காலமானார்