×

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு வார காலமாக டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பெருமளவு மழை நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற இதர பயிர்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஒருசில நாட்களே பெய்த மழையால், தண்ணீர் வடியாமல் வயல்களில் தேங்கியுள்ளன.

திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இருந்த வெற்றிலை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. காப்பீடு செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்குரிய நஷ்டஈட்டை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக பெற்றுத் தர அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரால் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களைக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாகவும்; பாதிப்படைந்துள்ள இதர பயிர்களுக்கு உரிய நிவாரணமும் உடனே வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Edappadi ,Chennai ,Secretary General ,Edapadi Palanisami ,Delta ,Nagapattinam ,Mayiladuthura ,Thiruvarur ,Thanjavur ,Cuddalore ,Tirunelveli ,Tuthukudi ,Theni ,Kanyakumari ,
× RELATED நான் ஒரு மலையாளி கேரளாவில் ராகுல் பெருமை