×

தென்காசி அருகே பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர்: வீடு தேடிச் சென்று கலெக்டர் ஆணையை வழங்கினார்

புளியங்குடி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த இடைகால் அருகே துரைச்சாமிபுரத்தில், கடந்த 24ம் தேதி 2 தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் புளியங்குடியை சேர்ந்த முத்துராமன் மனைவி மல்லிகா (55) உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மல்லிகாவிற்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகன் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒரு மகள் திருமணமாகி நெல்லையில் கணவருடன் வசித்து வருகிறார். மற்றொரு மகளான கீர்த்திகா (33), பார்வையற்ற மாற்றுத்திறனாளி. மல்லிகாவின் கணவர் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போதே உயிரிழந்து விட்டார்.

இதனால் மல்லிகா பீடி சுற்றி தனது குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். கீர்த்திகா எம்ஏ., பிஎட்., படித்துள்ளார். டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த மல்லிகா சாலை விபத்தில் உயிரிழந்ததால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போனது. எனவே பார்வையற்ற கீர்த்திகா, தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கீர்த்திகாவை நேற்று காலை போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் கலெக்டர் உங்களை வந்து சந்திப்பார் எனவும், அரசு வேலை கிடைக்க வழிவகை செய்து தருவதாகவும் கூறியிருந்தார்.

அதன்படி நேற்று தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் விபத்தில் பலியான மல்லிகாவின் வீட்டிற்கு சென்று கீர்த்திகாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கான பணி ஆணையை அவருக்கு வழங்கினார். பணி நியமனை ஆணை பெற்ற பிறகு கீர்த்திகா கூறுகையில், எனக்கு பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், கலெக்டர் கமல் கிஷோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் எம்ஏ., பிஎட்., வரை படித்து இருப்பதால் அதற்கான ஆசிரியர் பணி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.

Tags : Chief Minister ,Tenkasi ,Puliyangudi ,Duraishamipuram ,Kadayanallur ,Tenkasi district ,Mallika ,Muthuraman ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...