×

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவிடம் இன்று 2வது நாளாக சிபிஐ விசாரணை

கரூர்: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் தாந்தோணிமலை அரசு பயணியர் மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

துயர சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் நவீன கருவிகள் உதவியுடன் ஆய்வு செய்ததுடன் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள், தவெக நிர்வாகிகள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக தவெக பனையூர் அலுவலக உதவியாளர் குரு, மற்றொரு நிர்வாகியான குருசரண், தவெக வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரசு ஆகியோரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இதைதொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பொருளாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் தனித்தனியாக காரில் வந்தனர். இவர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் தவெக பிரசார கூட்ட ஏற்பாடு பணிகளை செய்தது யார், கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, எத்தனை பேர் கூட்டத்துக்கு வந்தனர், எத்தனை மணியில் இருந்து கூட்டம் கூடியது, கூட்டத்துக்கு வந்தவர்களுக்காக என்னென்ன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன, விஜய் எத்தனை மணிக்கு வந்தார், எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தது யார், ஆம்புலன்ஸ் எந்த வழியாக வந்தது, கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, இரவு 7 மணிக்கு விஜய் வருவது தெரிந்தும் ஏன் 12 மணிக்கே விஜய் வருகிறார் என்று வெளியிட்டீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு அவர்கள் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நடந்தது. இதைதொடர்ந்து 5 பேரும் சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்று கரூரில் கோவை சாலையில் உள்ள ஓட்டலில் 5 பேரும் தங்கினர்.

இதைதொடர்ந்து இன்று 2வது நாளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உட்பட 5 பேரிடம் விசாரணை நடந்தது. இதற்காக பயணியர் மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு 5 பேரும் வந்தனர். இதையடுத்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக விஜய்க்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Vijay ,Karur ,CBI ,Pussy Anand ,Adhav Arjuna ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...