சாங்லி: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நின்று போனது. அத்திருமணம் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக திகழ்பவர் ஸ்மிருதி மந்தனா (29). இவரும், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் (30) கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
இவர்கள் தங்கள் காதலை, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் உலகுக்கு தெரியப்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன், டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்திற்கு கண்களை கட்டியபடி மந்தனாவை அழைத்து வந்த முச்சால், கட்டை அவிழ்த்து விட்டு தன் காதலை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பின், இருவருக்கும் நேற்று, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடக்கும் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் பாதியில் நின்றது. மேலும், அந்த திருமணம் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ரா நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய துஹின் மிஸ்ரா, ‘திருமண நாளன்று, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
நேரம் போகப்போக, நிலைமை மோசமானது. அதன் பின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்ரீநிவாசை மருத்துவமனையில் சேர்த்தோம். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதனால், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது’ என்றார். இது தொடர்பாக, ஸ்மிருதி மந்தனாவும், முச்சாலும் தனிப்பட்ட முறையில் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை. மந்தனாவின் திருமணம் பாதியில் நின்று போனது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
