×

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்: இரண்டே நாளில் இங்கிலாந்து காலி; ஆட்டிப்படைத்த ஆஸ்திரேலியா

பெர்த்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், 2வது நாளிலேயே ஆஸ்திரேலியா அணி அசத்தலாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. பெர்த் நகரில் நேற்று முன்தினம் முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, ஆஸி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 32.5 ஓவரில் 172 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி வீரர்களும் இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டு கட்டு போல் சரிந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 2ம் நாளான நேற்று மேலும் 9 ரன் மட்டுமே எடுத்து 132 ரன்னுக்கு, ஆஸி ஆல் அவுட்டானது. அதையடுத்து 2வது இன்னிங்சை இங்கிலாந்து ஆடியது. இம்முறையும் ஆஸி வீரர்கள் மிரட்டலாக பந்துகளை வீசியதால் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 34.4 ஓவர்களில் அந்த அணி 164 ரன்னுக்கு சுருண்டது. அதனால், 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி 2வது இன்னிங்சை துவக்கியது.

இம்முறை சுதாரித்து பொறுப்புடன் ஆடிய ஆஸி துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் இங்கி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார். 83 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 123 ரன் குவித்து (17வது சதம்) ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜேக் வெதரால்ட் 23 ரன்னுக்கு அவுட்டானார். பின் வந்த மார்னஸ் லபுஷனே 49 பந்துகளில் 51 ரன் குவித்தார். அதனால், 28.2 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து, 205 ரன் குவித்து அட்டகாச வெற்றியை ஆஸி பதிவு செய்தது. ஆஸியின் மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* முதல் டெஸ்டில் பத்து: மிட்செல் ஸ்டார்க் கெத்து
ஆஷஸ் தொடர் வரலாற்றில் 34 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் பறித்த முதல் வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் அட்டகாசமாக பந்து வீசிய ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதையடுத்து, நேற்று நடந்த 2வது இன்னிங்சிலும் மாயாஜாலங்கள் நிகழ்த்திய ஸ்டார்க், இங்கிலாந்தின் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்தினார். அதனால், முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, 113 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், ஆஷஸ் தொடரில் 34 ஆண்டுகளுக்கு பின் இந்த சாதனையை நிகழ்த்தும் வீரர் என்ற பெருமையை பெற்று அசத்தியுள்ளார்.

Tags : Ashes ,England ,Australia ,Perth ,
× RELATED லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு!