×

சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்திற்கு 4 வாரங்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும்: குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு போலீஸ் பதில்

சேலம்: சேலத்தில் நடிகர் விஜய் பிரசாரம் தொடங்க அனுமதி கேட்ட விவகாரத்தில் குறைகளை நிவர்த்தி செய்து 4 வாரத்துக்கு முன்பே தருமாறு போலீசார் பதில் அளித்துள்ளனர். தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் நடத்திய பிரசார பயணம், கரூரில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதத்திற்கு பின் நடிகர் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

இதையடுத்து வருகிற டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் பிரசாரம் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், த.வெ.க. மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் கடிதம் கொடுத்தார். சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகில் இருக்கும் மைதானம் என ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

ஆனால், இந்த பகுதிகள் மிகவும் குறுகிய இடங்கள் என்பதால், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்த சீலநாயகன்பட்டியில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி திறந்தவெளி மைதானத்தில் பிரசாரத்துக்கு திட்டமிடுங்கள் என போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த தவெகவினர், குறுகிய இடமான 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடம்தான் வேண்டும் என்று அடம் பிடித்தனர்.

இதனை பரிசீலனை செய்த டவுன் உதவி கமிஷனர் சரவணன், த.வெ.க.வினருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தங்களின் கட்சி நிகழ்ச்சி நடைபெறுவதாக சொல்லும் 4ம்தேதி, காவல்துறையினர் வெளிமாவட்ட பாதுகாப்பு பணிக்கு செல்வதால் தேவையான போலீசாரை நியமிக்க முடியாது. விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறியுள்ள இடங்களில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

4ம்தேதி சேலம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் இல்லை. எனவே, தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது. இனி வரும் காலங்களில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டி மனு அளிக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி நடக்க இருக்கும் தேதியில் இருந்து 4 வாரங்களுக்கு முன்னதாகவே மனு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனு அளிக்கும் பட்சத்தில் காவல்துறை அம்மனு மீது நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த விளக்கத்தை மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்தீபன் ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* சிறிய இடத்தில் அனுமதி கேட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
விஜய் பிரசாரத்திற்கு சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகே இருக்கும் காலிஇடம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்குமாறு கேட்டுள்ளனர். கோட்டை மைதானத்தை பொறுத்தவரை இருக்கை போட்டு அமர்ந்தால் 5 ஆயிரம் பேர் வரை அமரலாம். நின்றுக்கொண்டிருந்தால் 8 ஆயிரம் பேர் வரை நிற்கலாம்.

போஸ் மைதானத்தில் இருக்கை போட்டு 9 ஆயிரம் பேர் அமரலாம். 15 ஆயிரம் பேர் நிற்கலாம். இதேபோல், தாளமுத்து நடராஜன் வீட்டின் அருகில் இருக்கும் மைதானமும் குறுகிய இடம்தான். இங்கு 30 ஆயிரம் வரை கூடலாம். ஆனால், இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை அருகில் வருவதால், இந்த 3 இடங்களையும் அவர்கள் குறிப்பிட்டு கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 இடத்திலும் அனுமதி கொடுத்தால் மாநகர் முழுவதும் ஸ்தம்பித்து போய்விடும்.

பேருந்துகள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் வாய்ப்பில்லை என்பதை தெரிந்துகொண்டே அவர்கள் அந்த இடத்தை கேட்டிருப்பது காவல்துறைக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இடத்தை போலீசார் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் தங்களை கண்டு பயந்துவிட்டார்கள், தங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்பதை சொல்லவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் எவ்வளவு பேர் வருவார்கள் என்ற விவரத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு வழியில் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பிரசாரத்துக்கு அனுமதி கேட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

41பேர் உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த கோபத்துடனும் அச்சத்துடனும் இருந்து வரும் நிலையில் அதனை திசை திருப்புவதற்காக நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சென்னை உயர்நீதிமன்றம் விதித்த விதிமுறைகளை அவர்கள் கடைபிடித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றனர்.

Tags : Vijay ,Salem ,Thaweka ,Karur… ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி...