×

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, நவ.13: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நவ.15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார், என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்வி, மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள் தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். இதுபற்றி பரிசீலனை செய்து சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக துறைமுகத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் பணிகள் நடக்கிறது. சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடக்கின்றன. கீழ் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. முதல் தளத்தில் டைனிங் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பந்தியில் ஒரே சமயத்தில் 600 பேர் அமர முடியும். இரண்டாம் தளத்தில் கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் தங்கும் வகையில் 8 அறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்துவிடும்.

இதேபோல் கொளத்தூர் தொகுதியிலும் சமுதாய நலக்கூடப் பணிகள் நடக்கிறது. இது ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுமொத்தமாக 180 கோடி ரூபாய் மதிப்பில் 16 சமுதாய நலக் கூடப் பணிகள் நடந்து வருகின்றன. வடசென்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 11 சமுதாய நலக் கூடப் பணிகள் நடக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு வாய்ந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தூய்மை பணியாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எத்தனையோ நாட்கள் சாப்பிடாமல் பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இந்த திட்டம் இருக்கும். 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 31,373 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர்.

விக்டோரியா மாலிலும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒருசில பணிகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. அடுத்த சில வாரங்களில் முடிக்கப்பட்டு முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை பெரிதாக இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு பெரிதும் குறைவு. அதேசமயம் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே அதிகாரிகளை முடுக்கி விட்டு சென்னை மாநகராட்சி மூலம் பணிகள் நடந்து வருகின்றன. மழையின் தீவிரத்தை பொறுத்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,K. ,Stalin ,Chennai Mayor Priya ,Chennai Municipal Mayor Priya ,Mu. K. Stalin ,
× RELATED சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை...