நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி டவரில் ஏறி காந்தியவாதி போராட்டம்

விராலிமலை, ஜன.5: விராலிமலை அருகே ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி காந்தியவாதி பேராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் சத்திரக்குளம் 2 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த குளத்திற்கு நீர் வரத்து இல்லாதால் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளத்தின் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் முதல் இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தியவாதி செல்வராஜ் (68) என்பவர் சத்திரகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் கடந்த வருடம் அக்டோபர் 6தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அன்று காலை ஆக்கரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது. 2 வீடுகள் மற்றும் 5 கடைகள் அகற்றப்பட்டன. வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நீதி மன்றத்தில் மறுபடியும் இடிப்பதற்கு குடியிருப்பு வாசிகள் சார்பில் தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் காந்தியவாதி செல்வராஜ் நேற்று காலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள தனியர் செல்போன் டவர் மீது ஏறி கொடும்பாளூர் சத்திர ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை தாசில்தார் சதீஸ்சரவணகுமார் செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கை விட்டு கீழே இறங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் செல்வராஜ் கூறும்போது, காந்தியவாதியாக நான் நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக பேராட்டம் நடத்தினேன். இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில் வருங்காலத்தில் 100 ரூபாய்க்கு விற்கும் நிலைமை வரும். அதை தடுப்பதற்காக நீர் நிலைகளை பாதுகாக்க போராட்டம் நடத்தினேன். கொடும்பாளூர் பகுதி கோயில்கள் நிறைந்த பகுதியாகும். ஆக்கிரப்பில் உள்ள கோயில் இடங்களை மீட்க எனது போராட்டம் அடுத்தபடியாக துவங்கும் என்றார்.

Related Stories: