×

செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

சென்னை, நவ.12: செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பிலிம் சிட்டி உள்ளது. இங்கு தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிலிம் சிட்டியில் வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் பிலிம் சிட்டி வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிலிம் சிட்டிக்குள் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டது. பலமணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Film ,City ,Chennai ,Film City ,Sembarambakkam ,Poonamalli ,
× RELATED சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை...