கச்சிராயபாளையம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் சடலமாக மீட்பு கிணற்றில் குதித்து தற்கொலையா? போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி, ஜன.4: கச்சிராயபாளையம் அருகே விவசாய கிணற்றில் இளம்பெண் சடலமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த தடயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைமுத்து (70), விவசாயி. இவரது மகள் ஷர்மிளா (23). இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர். ஷர்மிளாவின் பெற்றோர் நேற்று வெளியூர் சென்றிருந்த நிலையில், ஷர்மிளா வயல் வெளிக்கு மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வீடு திரும்பிய பெற்றோர், நீண்ட நேரமாக ஷர்மிளா வீட்டிற்கு வராததால் வயல்வெளிக்கு தேடிச்சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகே ஷர்மிளாவின் செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ஷர்மிளாவை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு, ஷர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். கச்சிராயபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>