குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட கோரி கூம்பூர் டூ கலெக்டர் ஆபீஸ் வரை 40 கிமீ பயணம் 300க்கும் மேற்பட்டோர் வந்ததால் பரபரப்பு

திண்டுக்கல், டிச. 31: குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட கோரி கூம்பூர் முதல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 40 கிமீ டூவீலர்களில் பேரணியாக வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப்பகுதியில் பெய்யக்கூடிய மழைநீர் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு வரும். அங்கிருந்து குடகனாற்று வழியாக வேடசந்தூர் அடுத்துள்ள அழகாபுரி அணைக்கு செல்லும். இந்த அணையில் கரூர் மாவட்டம் வெள்ளியணை வரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதிகளில் மிளகாய், நிலக்கடலை, புகையிலை, சூரியகாந்தி அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக வருடங்களாக போதிய மழை இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் நிரம்பி உள்ளது. மேலும் அணைக்கு வரும் தண்ணீர் ராஜவாய்க்கால், தாமரைக்குளம் பகுதிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் குடகனாறு ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கோரி, அப்பகுதி விவசாயிகள் குடகனாறு உரிமை மீட்பு குழுவை அமைத்து தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கூம்பூரில் இருந்து குடகனாறு உரிமை மீட்புக்குழு தலைவர் ராமசாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் டூவீலர்களில் அழகாபுரி, காசிபாளையம், வேடசந்தூர், தாடிக்கொம்பு வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர்  விஜயலட்சுமியை சந்தித்து, குடகனாற்றில் தண்ணீர் விட கோரி மனு அளித்தனர். இதுகுறித்து தலைவர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குடகனாற்றில் தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி சாலைமறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றார்.

Related Stories: