ஹமீர்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பர்சத்வா தரா காவ் கட் ஷானி கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் 7 கிமீ தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சேறும் சகதியுமான குண்டும் குழி சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டதால் கர்ப்பிணியை மாட்டு வண்டியில் கொண்டு சென்றனர். இது அக்கிராமத்தில் தொடர்கதையாக இருப்பதாக கிராமமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது பதிவில், ‘‘பாஜவின் தவறான ஆட்சியில் உபியில் ஆம்புலன்ஸ்கள் மாட்டு வண்டிகளாக மாறிவிட்டன. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாட்டு வண்டிகளில் இயங்குமா? முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அடுத்த கள பயணத்தின் போது சாலைகள், ஆம்புலன்ஸ்களின் நிலையை பார்க்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அவர் டெல்லியின் தொலைநோக்கிகள் அல்லது டிரோன்களை பயன்படுத்த வேண்டும். உபி சுகாதார அமைச்சர் விளம்பரம் தேடாமல், மக்களின் கஷ்டங்களில் அக்கறை செலுத்த வேண்டும்’’ என விமர்சனம் செய்துள்ளார்.
