ஐக்கிய நாடுகள் சபை: ‘ஜனநாயகம் என்பது பாகிஸ்தானுக்கு அந்நியமான கருத்து. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அவர்களின் உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கூறி உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் திறந்த விவாதத்தில் பாகிஸ்தானின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் ஜனநாயக மரபுகள் மற்றும் அரசியலமைப்பின்படி தங்கள் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் பாகிஸ்தானுக்கு அந்நியமான கருத்துக்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது, இருந்தது, இனியும் எப்போதும் இருக்கும். பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பட்டுள்ள பகுதிகளில்நடக்கும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அங்கு பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, மிருகத்தனம் மற்றும் வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதற்கு எதிராக மக்கள் வெளிப்படையான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஐநாவில் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். உலக விவகாரங்களில் முடிவெடுக்கும் போது, உலகளாவிய தெற்கின் பெரிய குரலை கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
