×

பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்; இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

புதுடெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலா 25 சதவீத வரியையும் டிரம்ப் விதித்துள்ளார். இந்த 50 சதவீத வரியால் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வரி விதிப்பு நியாயமற்றது என இந்தியா தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை தவிர்க்கும் முயற்சியின் ஒருபகுதியாக இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமூக தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஏற்கனவே இருநாடுகளும் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. மேலும், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஐநா வர்த்தக மேம்பாடு மாநாட்டின் 16வது அமர்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் ஜெனிவா சென்றார். அதைத்தொடர்ந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் சென்ற பியூஷ் கோயல் நேற்று, ஜெர்மனியிலுள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த வாரம் வாஷிங்டன் சென்றபோது வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா – அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் நியாயமான, சமமான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் தற்போது எந்த பிரச்னைகளும் தடையாக இல்லை. இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் முயற்சியில் மிக அருகில் உள்ளன” என தெரிவித்துள்ளனர்.

Tags : India ,US ,Union Minister ,Piyush Goyal ,NEW DELHI ,United States ,President ,Trump ,Russia ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்