கடலூர், அக். 25: கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அந்தமான் கடலில் நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்தமான் போர்ட் பிளேயர் துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அல்லது நாளை (26ம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27ம் தேதி புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ஏற்கனவே, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 19ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. நேற்று முன்தினம் சிறிய ரக பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். தற்போது, மீண்டும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சிங்காரதோப்பு, ராசாப்பேட்டை, தாழங்குடா, சொத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், கடலூர் துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
