×

வேலைவாய்ப்பு, வங்கி அதிகாரி என கூறி புதுவையில் 3 பேரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி

புதுச்சேரி, டிச. 15: வேலைவாய்ப்பு, வங்கி அதிகாரி எனக்கூறி புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். பின்னர், அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, வேலைக்கு முன்பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி மேற்கூறிய நபர் ரூ.41 ஆயிரத்துக்கு மர்ம நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார். மேலும், ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவரை மர்மநபர் தொடர்புகொண்டு வங்கி அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். மேலும், மர்ம நபர் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்து, கிரெடிட் கார்டு விவரங்களை வழங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது கிரெடிட் கார்டிலிருந்த ரூ.39 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. தொடர்ந்து, முதலியார்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை மர்ம நபர் தொடர்புகொண்டு வீட்டிலிருந்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபர், ரூ.90 ஆயிரத்தை மர்ம நபருக்கு அனுப்பி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார்.

அதில் சம்பாதித்த பணத்தை மேற்கூறிய நபரால் எடுக்கமுடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணர்ந்தார். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.1.70 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Puducherry ,Shanmugapuram ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்