×

மயிலம் அருகே டயர் வெடித்து பைக் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்

மயிலம், டிச. 12: மயிலம் அருகே தனியார் ெசாகுசு பேருந்து மோதியதில் பைக்கில் வந்தவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா இடையங்குளம் கிராமத்தை சேர்ந்த சங்கரபாணி மகன் கமலக்கண்ணன் (35). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கேணிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றது. இந்நிலையில் மயிலம் அடுத்துள்ள கேணிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே திடீரென பேருந்தின் டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் எதிர்திசையில் பாய்ந்தது.

அப்போது அவ்வழியாக வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Mayilam ,Kamalakannan ,Sankarapani ,Idayangulam ,Vanur taluka ,Villupuram ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்