ஈரோடு, அக்.24: ஈரோடு மாநகராட்சி 19வது வார்டு, நல்லிதோட்டம் பகுதியில், நசியனூர் ரோட்டில் இருந்து போஸ்டல் நகர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைகள் உள்ளன. இந்த பாதாளச் சாக்கடையின் மேற்புறத்துளைகள் அடிக்கடி உடைந்து வந்ததால் மாற்றப்பட்டும் வருகின்றன. சில பாதாளச் சாக்கடைகளில் மேல்பக்க துளையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதும் வாடிக்கையாக உள்ளது. அப்படியான சில இடங்களில் பக்கவாட்டில் குழாய் பதித்து கழிவுநீரை அருகில் உள்ள கிளை வாய்க்காலுக்குச் செல்லுமாறு இணைத்துள்ளனர்.
இந்நிலையில், போஸ்டல் நகர் செல்லும் சாலையில் உள்ள காய்கறி கடையின் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாள்களாக சாலையில் வெளியேறி வருகிறது. அந்த கழிவுநீர், அருகில் உள்ள வாய்க்காலில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதாளச் சாக்கடை உடைந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
